காரணமில்லாமல் காற்றில் பறக்கும் அதிசயம்
நானுணர்ந்தேன்
விண்வெளியில் இயக்கங்கள் ஏதுமின்றி யாவும்
உறை நிலையில்
உலவும் விந்தை கண்டேன் நீ விழி மூடித் திறவும்
இடைவெளியில்.!
மேகங்களின் முத்தச் சண்டையில் சிந்திச்
சிதறும் தேனெல்லாம்
மழைத்துளியாய் மண்ணில் மோத பரவச
மடையும் நிலம் போல்
ஆனேனோ? நானும் உன் மூச்சுக் காற்று
என்னை தீண்டும் வேளையிலே.!!
மழை நேர சங்கீதமாய் மயக்கும் நின் குரல்
மெல்லிசையில் நனையாமல்
நனைந்து தேகம் பரவும் குளிரில் நான் பருகும்
கோப்பையில் தேநீராய் வழியும்
இதழ் முத்தம் - மழை நின்றும் தீரா காய்ச்சலில்
உன் வாசம் வீசும் போர்வைக்குள்ளே நான்.!!
நீயில்லா கவிதையெல்லாம் என் பேனா முனையும்
விரும்பாது - கூடல் கழிந்ததும்
இதழ்கள் தேடும் நிறைவு முத்தம் போலே கவிதை
முடிந்தும் நின் மொத்தம் தேடும்
எந்தன் இதயம் - கலவல்ல இது, எண்ண ஆடைகள் மூடி
மறைத்த என் ஆசைகளின் விடுதலை.!!
நீயில்லா நேரங்களில் கவிதையின் போதையில்
மிதக்கிறேன் - தலைக்கேறும்
போதையெல்லாம் ஒளிச்சிதறலாய் உன் முகம் .!
வார்த்தை தீரும் இடைவெளி
யெல்லாம் உன் பெயர் எழுதி வாசிக்கையில் மீதமெல்லாம்
பொருளற்று போனதென்னவோ?
ஜனன ரகசியம் தேடி ப்ரம்ம லோகம் சென்றிருந்தேன்
நின் வதன அளவுகள் வைத்து
சிற்பங்கள் பல நிற்க கண்டேன் ஒன்று கூட
உன் போல் இல்லையடி .!!
காற்றில் செதுக்கிய சிலையை கண்டவர்
யாருமில்லை என்னை தவிர.!!
என்னை தொலைத்த நொடியை மறந்தேன்
வாழ்வின் தேடல் முடியுமிடம் உன் கண்கள்
தானென்று சரண் புகுந்தேன்.!!
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக