கவியோ மதுவோ



தீரா பெருங்காதல் நானுற்றேன்
தீருமோ என் மயக்கம்
தீந்தமிழில் நானுரைத்தால்?
சித்தம் தெளியா வேளையில்
செவி நிறைக்கும் நின் சிரிப்பலையில்
நான் கரையவோ?

பேனா முனையில் ஒளிந்திருக்கும்
மை போல நரம்பினுள்ளே
நகரும் உன்னை நானுணர்ந்தே
தீரா மயக்கத்தில் நினைவற்ற
பறவையாய் விண்ணிலிருந்து மண்ணை
நோக்கி பாயவோ?

தலைக்கேறும் போதையெல்லாம்
"தத்தரிகிட தித்தரிகிட தித்தோம் "
தாளம் போட்டு நர்த்தனமாட என்னை
நானுணரும் வேளையிலே மீண்டு
மென்னை உள்ளிழுக்கும் கண்களின்
ஈர்ப்புவிசையில் மூழ்கவோ?

நீ ஸ்வாசம் வாங்கும் வேளையில்
பூமி எல்லாம் வெற்றிடமானது
நீ நடக்கும் பாதையில் கிரகங்கள்
கிறங்கி கிடக்கும் நிலையேனடி?
உன்னைத் தீண்டும் புயலும் தென்றலென
மாறும் அதிசயம் என்னவோ?

விழித்ததும் மறையும் கனவுகளில் ஒற்றை
வரி கவிதைகள் ஆயிரம் என்
செவிகளில் நீ வாசிக்க கனவு கலைந்தும்
மறையா வரிகள் எல்லாம் என்னெதிரே 
உன்னுருவாய் என் பேனா வழியே கவிக்குழந்தை
சுகப்பிரசவம் - நீ சுகம் தானே?

உனை எழுதும் கவிக்கும் சுவையேறிய
மதுவுக்கும் மட்டுமே என்னை சாய்க்கும்
திறனுண்டு - கவியின் போதையில் நித்தமும்
மிதக்கிறேன் மயங்கிக் கிடந்திட அன்று
உன்னில் நானும் மொத்தமாய் மூழ்கிட
கவியோ? மதுவோ நீ?

உன்னில் தொலைத்த என்னைத் தேடி.!

- அஜய் ரிஹான்

கருத்துகள்