#தலைவி பிறப்பு
ஜனனம் கடந்து பிறப்பெடுத்தேன் நின்
கரம் பிடித்திடவே - குறவர் குலமகள்
உருவெடுத்தேன் உன்னை நினைத்து உருகிடவே
நம்பியின் மகளானேன் வள்ளியென பெயர்சூடியே
வேண்டிய வரமொன்று பெண்ணென உரு
கொண்டு துள்ளியோடும் மானோ ? தித்திக்கும்
கொம்புத் தேனோ? செங்கழனி மேய்ந்த
ஆவின் பசும்பாலோ? களிப்புற்றானே நம்பியும்
#தலைவியின் கனவு
மலை போல் பெருங்கனவு நானுற்றேன்
மனம் முழுதும் தேனொழுகும் நின்னழகு
மாமுனியுரைத்த கதை கேட்டே நின்
வசம் நானிழந்தேன் என்னை கந்தா.!
திடந்தோள் அழகனே மயில் மீதேறி வாராயோ
சங்கத் தமிழ் தலைவனே சீக்கிரம் வருவாயோ
சூரன் வதம் செய்த வீரனே
குறிஞ்சி மகள் கரம் சேர்வாயோ?
#குறி பார்த்தல்
கோல் சுழற்றி ஆடி வந்தாள்
குறத்தி ஒருத்தி வாடிய முகம்
பூத்திடவே குமரனவன் புகழ்
சொல்லியவள் காதலின் மைய்யம் கண்டாள்.!!
வருவானடி வருவானடி வேலன் உன்
கரம் சேர அனுமதி கேட்பானாடி வேடன்
ஊடல் செய்யும் வேதனை காண்பாயாடி
ஏங்கியே வஞ்சி இடை இளைப்பையடி.!!
#தலைவன் வருகை
வேடமிட்டு வந்தானடி வேடன் மனம்
சேர ஆசை என்றான் - போவென
சொல்லி உண்மை உருவம் உணர
மறந்தேனடி படபடக்கும் சிறகுகள் உள்ளத்தில் .!
பசியென்று வந்தான் கிழவன் தினை
கொண்டு அமுதளித்தேன் தாகம் என்றான்
குளத்தில் தண்ணீர் அள்ளித் தந்தேன்
தீர்ந்தது தாகம் வந்தது காதலென்றான்.!!
#வாழ்த்து மங்களம்
மறுமொழி சொல்லியே நகரும் முன்னே
ஆணை முகன் வழி நிற்கவே
அபயம் என்றே கிழவன் கரம்
சாய ஒரு முகம் மறைந்து
வேலொடு ஆறுமுகம் தோன்ற நெஞ்சில்
கொண்ட காதல் கண்ணில் இடமாற
கரம் பிடித்தேன் என் கந்தனை
"கந்தனே என் காதலன் "
சுபம்
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக