நீ-நான்-நாம் பிழை




உயிர் கொள் தமிழா - உன்னை
நீயே மீட்டெடுக்கும் வேளை இது
நெஞ்சம் நிமிர் தமிழா- போர்க்களம்
காணும் வேளையிது ஆயுத்தம் கொள்.!

கனவு கண்டது போதும் - உன்னைச்
சுற்றி நிகழும் யுத்தம் யாதென்று
உணர் - தீட்டிய வாளை உறையில்
உறங்கச் சொல்வது வீரனின் அழகோ?

சுதந்திரக் காட்டில்  சிங்கங்கள் பல
உலவ  தந்திர நரிகள் ஆள்வது
விதியோ?, முறையோ? - இன்னும் மௌனம்
காத்து நிற்பது தான் தர்மமோ?

விழி திறவாய் தமிழா இருளகற்றும்
ஒளியென தீச்சுடராய் எழுந்து வா.!
நாற்றமென முகம் சுளித்து ஒதுங்கியது
போதும் புரட்சியென சுத்தம் செய்யவோம் - வா.!!

கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைச் சுற்றி
புற்றென வளரும் கரையான்கள் மெல்ல
உன்னையும் உணவென தின்னும் நாள்
வரும் - களையெடுக்க இன்னும் தயக்கமோ?

மிருகம் கொன்று மீண்டெழுந்த நாகரீகத்தில்
மனிதனை மீண்டும் மிருகமாய் மாற்றும்
கலைகள் அறிந்தவன் கையில் செங்கோல்
மதங்களின் போர்வையில் மறைமுக வர்த்தகம்!

கூத்தில் குதூகலித்து மதி(து) மயங்கி
கிடக்கும் வேளையில் உரிமை ஆடைகளை
ஒவ்வொன்றாய் திருடிச் செல்லும் கள்வர்
கூட்டம் - இன்று அரை நிர்வாணமாய், நாளை??

விலைக்கு விற்று பிழைத்ததும் போதும்
தலைமுறை கிரீடம் சுமந்ததும் போதும்
ஆள்பவன் பிழையென்று சொல்லிக் காலம்
கழித்ததும் போதும் -  விதி செய்வோம் வா

சமூக வலைத்தளங்களில் கருத்து சொல்லி
ஒழிந்தது போதும் 'யுகம்' செய்வோம்
தோழா - இனியும் மௌனம் காப்பது
தலைமுறைப் பிழையாகும் சரி செய்வோம் வா.!

கரங்களில் கறைகள் அழகு தான்
உன் தேர்வு சரியென்றிருந்தால் - பிழை
செய்தே பழகி விட்டோம் சீர்
செய்யும் சமயமிது சிந்தித்து செயலாற்றுவோம் வா.!

"நம்மை நாமே செதுக்குவோம்" தமிழா வா .!!

 - இது புரட்சி அல்ல; விதை
- அஜய் ரிஹான்

கருத்துகள்