கடவுளும் கந்தசாமியும்



மரணமும் ஜனனமும் இல்லா வேளையில்
வினோத வினையொன்று சிந்தையில் உதித்தெழ
படைத்தல் வேட்கை துளிர் விட்ட
பேராசை - கணக்கில்லா உயிர்கள் இவ்
வுலகில் உலவுதல் தகுமோ அந்தமே?

பிழையென உரைப்பேன் உம் தொழிலை
பாவம் மனிதனை படைத்தது விட்டாய்
எமக்கும் ஒரு நாள் கடவுளாகும்
வரம் கொடு மொத்தமாய் அழித்தல்
தொழிலை பார்த்து விடுகிறேன் மீண்டும்

படைத்தல் செய்வோம் நீயும் நானும்  
கலப்படமின்றி.!!

தூய ஒளியூட்டி இயற்கையவள் அமுதூட்டி
திடமாய் மனம் பூட்டி க்ரோதம்
துளியுமின்றி தீமை அண்டா தெளிந்த அற
வொளியேற்றி அங்கங்கள் அழகுற ஆடி
அசைய, நிர்வாண நிலையிலும் தலைக்கேறா

காமத்தில் பால் இனங்கள் உலவித்
திரிய படைத்தல் செய்தாயோ? பாறைகள்
உடைத்து அடுக்கி உளிகள் சிற்ப
காயங்கள் விட்டுச் செல்ல இளகிய
மனமொன்று வைத்தனுப்பி தீரா கடுஞ்

சோதனைகள் தாண்டி தினவெடுத்த தோளோடு
பூமியில் முதலாய் ஆதாம் எழ!

நறுமண மலர்கள் பல கோர்த்து
சங்கம நதிகள் ஆரத் தழுவி
பொன்னுளியில் வடித்தெடுத்த வளைவுகள் வைத்து
பிட்டம் தொடும் கருங் கூந்தலோடு
பல்லக்கில் வந்திறங்கினாள் - ஏவாள்.!!

மொழிகள் இல்லை பேசிச் சிரிக்க  
உடைகள் இல்லை மூடி மறைக்க
பிரிவினைகள் இல்லை சாதிகள் சொல்ல
மதங்களும் இல்லை கடவுளை கூரு
போட்டு விற்பனை செய்ய!

வளரும் வயதும் வளரா கள்ளமும்
அன்போ பருவமென வளர்ந்து மாறிடவே.!

சத்தமின்றி சாத்தானும் சங்கமம் ஆனது
என்ன விந்தையோ? அறிவாயோ பிரபஞ்சமே?
மாற்றங்கள் முட்டி மோதும் மாயமோ?
சதியெழுதும் விதி முன்னறியும் வழியுண்டோ?

வெட்கம் வந்தவனை எட்டி உதைக்க
இலைகள் கோர்த்து மூடி மறக்க
நாணம் அவளை வாட்டி வதைக்க
புள்ளி மான் தோலாடைஅவள்
மேடு மறைக்க - மிருகம் கொன்று

புசித்து தனிமைக் காட்டில் உலவித்
திரிந்து, தழுவல் பொழுதில் மோகத்
தீயோ தேகம் பரவ மொழிகள்
அறியா இதழ்கள் பேசும் முதல்  
பாஷை காதலோ?  காமமோ.? கூடலோ.?

படைத்தல் செய்தே படைகள் சேர்த்தாய்
கூட்டம் சேர்த்தே கோல் உயர்த்தினாய்
சூழ்ச்சிகளால்ஆட்சி செய்தாய் - அக்கிரமங்கள்
நிகழ்ந்தேற அழையா விருந்தாளியாய் அரக்கனையும்
மித்திரன் என்றாய் - கடவுளும்உறைந்தே

போனான் சிலையென உயரங்கள் தேடி
நிலத்துக்கொரு நியாயமென்றாய் பணிந்தவன்
அடிமையென்றாய் பணியா நாய்கள் கழுகுக்கு
இரையென்றாய் - பெண்கள் சுகம் சுரக்கும்
மதுவென்றாய் - எல்லைகள் பிரித்தாய் வன்முறையால்

வரைமுறைகள் வகுத்தாய்.!!

திசைக்கொரு சாதிகள் வளர்த்தாய் அதற்கென
நியமங்கள் தொகுத்தாய் - அரியணை வாசனும்
அ(ஞ்)ன்யாத வாசம் சென்றான் சமவெளியில்
உன்குலம் கொன்றே உன்கொடி உயர்த்தினாய்
ஐந்தறிவு ஜீவனும் நின் படையின்

பலமென்றாய் குலத்தின் கணத்தில் பதவி
என்றாய் - மொழி பல பிறப்பித்தாய்
கல்விக் கூடம் எண்ணிக்கையை அந்தப்புரங்கள்
தோற்க்கடித்த வரலாறுகள் படைத்து வைத்தாய்
கடவுளின் பெயரில் கொடுமைகள் பல

நிகழ்த்தி வந்தாய் - கூடியவளை உடன்
அனுப்பும் சதி விதிமுறை என்றாய்
மூடா நீ - இதையும் அவன் கணக்கில்
ஏற்றிவிட்டாய் வண்ணத்து பூச்சி யெல்லாம் 
வெள்ளையாய் பறக்க ஆணை இட்டாய்

ஆண்டாய் அடிமைப்பட்டாய் மீண்டாய்
மாண்டாய் பிறந்து எழுந்தாய் கொதித்தெழும்
வீரமென வெகுண்டெழுந்தாய் மாற்றங்கள்
மட்டும் மாறி மீண்டும் மாற்றங்கள்
கண்டே சுக போகனாய் வாழ்ந்தாய்

ஆனால் இன்று.....!

சக மனித சதை பிய்த்துண்டு
மனிதம் யாவும் நைய்யப் புடைத்து
மிதித் தெறிந்து பிறர் இடர்
கண்டு விழி மூடிக்கொள்ளும் சம
உலக மானிடா பிழையின் கரு

தேடும் நீ சற்று நின் பிரதிபலி
பிம்பம் காண்பாயோ? விவாதிக்க
பல காரணிகள் உண்டு - நின்னை
சீர் செய்யும் நேரம் இது!
முன்னோக்கி பாய்ந்தது போதும் சற்று

பின்னோக்கி ஆராயும் வேளை இது
தொலைத்ததை மீட்டெடுக்கவும் நாமே
புதிதாய் மீண்டெழவும் கொஞ்சம் பேசிக்
கொள்வோம் கந்தசாமியாய் கடவுளிடம்

மீண்டும் புதிதாய் பிறக்கட்டும்
"ஆதாமும் ஏவாளும்" புதியதோர் உலகத்தில்!

(பரிணாமங்கள் உரைக்கும் பதிவல்ல, நான் கந்தசாமியாய் மாறிய தருணத்தில் யாம் அறிந்த கடவுளிடம் பேசிய உரையாடல்)

- அஜய் ரிஹான்

கருத்துகள்