அகலிஹா


யார் இவள்?

அழகுக்கெல்லாம் அழகு கொண்டார் பேரழகு கொண்டவள் தான்.இந்த அண்ட சராசரமும் பார்த்து வியந்து போகும்படியான தகதகக்கும் மேனியை உடையவள்.  வானவில்லின் வண்ணங்களின் அழகெல்லாம்  எல்லாம் இவள் தேக அழகின் முன்னால் தோற்றுப்போகும் விதத்தில் தோற்றமளித்தாள்.

சிறு குடை ஆள்பவன் தொடங்கி ஆயிரமாயிரம் யாகங்கள் செய்து முடி சூடி, ஐராவதம்  கொண்ட இந்திரன் வரை இவள் அழகில் மயங்காதோர் இவ்வுலகில் இல்லை. பார்த்தவுடன் மயக்கும் கண்கள், அவை கண்களோ, மதுவோ என குழப்பம் கொள்வோர் சிலர். நேர்த்தியான சிற்பமமொன்று சிங்காரம் செய்து உலவும் தங்க காரிகையோ?

படைத்தல் தொழில் செய்யும் பிரம்மனின் மொத்த களைத்த திறமையும் ஒரு சேர சேர்த்து செய்தேனோ இவளை? இல்லை இல்லை, மோகினி அவதாரம் கொண்ட விஷ்ணுவின் அழகின் பிரதியோ? அடடா!  இவள் அழகை என்னவென்று வர்ணிப்பது? பாற்கடலை கடையும் போது வெளிவந்த கொடும் விஷத்திற்கு நிகரான அழகு கொண்டவளோ இவள்?

முனிவரின் மகளாக பிறந்த இவளை மணம் கொள்ள நான், நீ என நின்ற வரிசை பூமியின் அரை வட்டத்திற்கு சமமாக இருந்தது. ஒருவருக்கு மணம் முடித்து கொடுத்தால் இன்னோருவரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என அச்சம் கொண்டார்.

மனம் கலங்கி நின்ற முனிவரிடம் அவ்வழியே வந்த நாராயணன் நாமம் சொல்லும் கலகக்காரன் (நாரதர்) இதற்கு ஒரு உபாயம் சொல்கிறேன் அதன் வழி செய்யுங்கள் என்றார். தயை கூர்ந்து கூறுங்கள் என்றார் அம்முனி.

"எவன் ஒருவன் இரு தலை கொண்ட பசுவை கண்டு வருகிறானோ அவனுக்கு உம் மகளை மணம் முடித்து கொடு" என்றார் நாரதர். முனிவரின் முகமோ கவலை படர்ந்தது. ஏனென்றல் உலகில் இரு தலை கொண்ட பசுவை காண்பதென்பது நிகழாத காரியமாயிற்றே.

இவள் மீது ஆசை கொண்டிருந்த கௌதம முனியிடம் சென்றார் நாரதர்.  அவரை கண்டவுடன் வணங்கி நமஸ்கரித்து நின்றார் கௌதமர்.

அவளை மணம் கொள்ள விருப்பம் கொண்டுள்ளாயா? என்றார். முனியோ, ஆசை கொண்டிருந்து என பயன் நாரதரே. எங்கே சென்று காண்பேன் ஓர் உடலில் முன்னும் பின்னும் சிரம் கொண்ட பசுவை? ஒரே உடலில் இரு தலைகள் கொண்டு பிறந்த பசுவை கூட கண்டிருக்கிறேன் ஆனால்..! என சோர்வு நிரம்பிய குரலில் சொன்ன கௌதம முனிவரை பார்த்து நாரதர், அதோ அங்கே மாட்டுத் தொழுவதை பார். இன்னும் சற்று நேரத்தில் அந்த பசு கன்றை ஈனும், கவனமாய் காண் என்றார்.

அவர் சொல்லியவாறே அந்த பசு தன் கன்றை போட முயற்சித்துக் கொண்டிருக்கையில், சிறிது நேரம் கழித்து, தலை மட்டும் வெளியே வந்தது முதலில். அதனை கண்ட கௌதம முனிவர் ஆச்சார்யத்தில் மூழ்கினர், பின்னர் அப்பசுவை மும்முறை சுற்றி வணங்கி வந்து நமஸ்கரித்தார்.

இவர் கண்ட நிகழ்ச்சியை அவளின் தந்தையான முனிவரிடம் சொல்லி அவளின் கரம் பற்றி மணம் கொண்டார் கௌதம முனிவர்.

நெறி தவறாத முனிப் பத்தினியாக வாழ்ந்து வந்தாள் அவள். முனிவரின் பூஜைகளுக்கு தேவையான கைங்கரியங்கள் செய்து வந்தாள்.

அவள் மீது கொண்டிருந்த மோகத்தால், அவர் இன்னொருவரின் மனைவி என்றான பின்னும் இச்சைத் தீயில் மூழ்கி இருந்தான் இந்திரன். அவளை எப்படியேனும் அடைந்தே தீர வேண்டுமென்ற ஆசைக்கனவில் மிதந்து கொண்டிருந்தான்.

ஒருநாள் விடியற் பொழுதிற்கும் முன் பொழுதில் குடிலுக்கு அருகே வந்த இந்திரன் சரியான சமயத்திற்காக காத்திருந்தான். இதுதான் சமயமென கருதிய இந்திரன் சேவலென மாறி "கொக்கரக்கோ" என சப்தம் செய்தான். தினமும் விடியற்பொழுதில் பூஜைகள் செய்பவரான கௌதமர் பொழுது விடிந்ததென நினைத்து தினசரி அனுஷ்டானங்களுக்காக அருகே இருக்கும் ஆற்றுக்கு புறப்பட்டார்.

கௌதமர் புறப்பட்டதை பார்த்த இந்திரன் சற்றும் தாமதியாது  குடிலின் அருகே வந்தான், கௌதம முனிவரின் வேடம் பூண்டான்.

கதவை திறந்த அவளுக்கோ ஆச்சர்யம், இப்பொழுது தானே சென்றார் இவ்வளவு விரைவில் வந்து விட்டார் என யோசித்துக்கொண்டே "வாருங்கள் சுவாமி "என்றாள்.

 இல்லை தேவி, இன்று உன்னுடன் சுகித்திருக்கலாம் என திரும்பி வந்துவிட்டேன் என்றார் அவ்வேடத்தில் இருந்த இந்திரன். அவரின் குரலை கேட்டவுடன் அவளில் ஏதோ ஒரு இனம் புரிந்த தயக்கம், குழப்பம், சந்தேகம் எல்லாம் ஒரு சேர தாக்கின. வந்திருப்பது தன்னுடைய சுவாமி தான என்ற சந்தேகம் கூட வந்தது. ஆனாலும் ஒருவேளை தம்முடைய ஐயம் தவறாய் இருந்தால் ? அது பெரும் தவறாகிவிடுமே என்று எண்ணி தன் ஸ்வாமிக்கு செய்யும் பணிவிடைகள் அதையும் செய்தாள்.

சிறிது நேரம் கழித்து அவ்விடம் வந்த கௌதம முனிவர், அங்கே நிகழ்ந்தேறியவற்றை தம்முடைய ஞானத்தால் அறிந்தார். கடுங்கோபம் கொண்ட அவர் அவளை "கல்லாய் கிடவது" என சபித்தார். அவரிடம் நிகழ்ந்ததை கூறி, தமக்கு சாப விமோச்சனம் அருள கேட்டாள்.

அவள் தம்முடைய உருவம் கொண்டு அவன் சென்றமையால் தான் இந்நிகழ்வு நடந்தேறியது, ஆதலால் அவளுக்கு சாபவிமோசனம் அளித்தருளினார்.

ராமபிரான் பொற்பாதம் பட்டு மீதும் தம் தேக உரு பெற்றாள். அவள் தான் "அகலிகை"

காமாதுராணாம் ந பயம்! ந லஜ்ஜா! (மோக வயப்பட்டவனுக்கு பயமும் இல்லை; வெட்கமும் இல்லை!) 

- அஜய் ரிஹான்

கருத்துகள்