நிறமில்லா பூக்கள்



தினமும் கிழித்தெறிந்த தினசரியில்
காய்ந்து போய் மடிந்த நேற்றைய
கனவின்  வாசம்

வசந்தம் வாசல் வருடுமென ஆசையாய்
இட்டு வைத்த கோலத்தில் மிச்சமாய்
நின்றது முற்றுப்புள்ளி

போனி ஆகாத வீடென்பதால் மணம்
வீசாது வஞ்சனை வீசி வீடு
கடக்கும் வாசமில்லா பூக்கள்

முகவரி சொல்லும் அடையாளம் ஆனேன்
'அந்த வெள்ளைச் சேலைக்காரி வீட்டிலிருந்து
நாலு வீடு தள்ளி'

ராசியில்லாதவள் - பஞ்சு மெத்தையில் கட்டிலி
சைக்கும் தாலாட்டில் தூங்க - அற்பாயுள் கொண்ட
தாலிக்குச் சொந்தக்காரி

இலக்கியம் கூறிய தொண்ணூறு நாட்களில்
திங்கள் கூட காணாத அவளின் இரவுகள்
மரணத்தின் மீட்சி

என்றேனும் அவள் வாசலில் பூக்கும்
ரங்கோலியின் வண்ணங்கள் சேலையில்
ஆசையாய் ஒட்டிக்கொள்ளும்

நிலைக் கண்ணாடியில் ஒரு நொடி
வெள்ளைச் சேலையும் மறுமண(ன)ம்
கொள்ளும் பட்டாம்பூச்சியாய்

தினமொரு நகர் எரிக்க புறப்பட்டி
ருப்பாள் கண்களால் தின்னும் பாவ
உயிர்களுக்கு மோட்சமளிக்க

வேள்வி தீயில் தினமும் கருகும்
அவள் ஆசையும் வேட்கையும்
நரகத்தின் நிழல்

இரவின் தனிமையில் தொலைந்தே போகும்
இவளின் தாபமும், தாகமும் விடியல்
மீண்டும் பாலைவனமோ?

தற்கொலையில் இவளுக்கு மட்டும் தான்
முரண் இவள் வளையல்களுக்கு இல்லை
முட்டி மோதி உடைந்தது

சகுணம் சொல்லும் மூடர் முன்னே
நாணிச் செல்கின்றாள் விழைந்து அழைப்பாளர்
பட்டியலில் இவளொரு கேள்விக்குறி !

பாலூட்டும் இன்னொரு உயிரை கண்டால்
கூட மார் தடவி பார்க்கின்றாள் கண்ணீர்
சாட்சியம் சொல்ல

முள்ளென தைக்கும் மழலையின் முத்தம்
ஊமையாகி போனது இவளின் கொலுசுச்
சத்தம் -  என்று தீருமோ இவளின் தாகம்

- அஜய் ரிஹான்

கருத்துகள்

  1. விடியலைத் தேடும் வாடாமல்லி, விடிந்ததும் தலை நிமிர துடிக்கும் சூரிய காந்தி.. அந்தி மந்தாரை பூவாய் மாலையில் மலறுகிறாள்.. விடியும் முன்னரே வாடிவிடுகிறாள்...

    பதிலளிநீக்கு
  2. ஒரு வெள்ளைக் கவிதை சகோ🖤👌

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக