போர்க்கால அடிப்படையில்




எங்கோ தொலைந்தே விட்டேன்!
தொலைந்து விட்டேன் என்பதை தவிர வேறேதும்
விடயங்கள் கிட்டவில்லை
என்னை போல் தொலைந்தவர் யாரேனும் என்னருகில்
திரிகிறார்கள் என்று தேடினேன்

ஒரு துளி சாயல் கூட இல்லாமல் அத்துணை முகமும் என்னை
ஒரு கோமாளியை பார்ப்பது போலே உணர்ந்தேன்
ஒரு நொடி நின்று கோமாளியின் முகம் இப்படி தான் இருக்குமோ
என்றொரு கேள்வி நிலை கண்ணாடி முன்
ஒருத்தர் கூடவா இல்லை? என்னை போல் தன்னை தொலைத்தவர்கள்?

தெருவில் மெலிந்து நலிந்து திரிந்த நாய் ஒன்று
என்னை பார்த்தவாறே நின்றது
என்னை விடவும் நலிந்து போய் திரியும் எவரேனும் இருப்பாரோ?
என அது தேடி இருக்க கூடுமோ?
சில நொடிகள் பூமி சுற்றாது நிற்பது போல உணர்ந்தேன்

சுற்றி உள்ள எல்லா ஜீவ ராசிகளும் தன்னை விட எதாவது ஒரு வகையில்
என்னை ஏளனமாய் பார்த்து சிரிக்கும் சத்தம்
இவ்வளவு துவண்டு விட்டேனா? இல்லை என்னை இப்படி செய்யும் அளவுக்கு
என்னை சூழ்ந்து நிற்கும் எதிர் வினைகள்
அத்துணை வலிமையானவையோ?

நித்தமும் செய்து வந்த ஒன்றை காலத்தின் பெயரில் மறந்து விட்டேன்
கரணம்  காலம் தான் என்றேன்
ஆசையாய் என்னை முத்தமிட்ட தமிழை தனிமையில் தவிக்க விட்டு
பழி சுமத்த நேரம் தான் கயவன் என்றேன்
விரல்கள் தீண்டத் தீண்ட இன்பம் தந்த பனுவல்களை தனியே பரணில் உறங்க வைத்தேன்
நானின்றி அவை தவித்திருக்குமோ?

குற்றம் சாற்ற யாரை அழைப்பேன் குற்றம் இழைத்தது நானென்று அறிந்த பிறகு?
மாயத் திரைக்குள் நெடுங்காலம் மயங்கி கிடந்தது விட்டேனோ?
இன்னும் என் கரங்களில் படர்ந்து கிடக்கிறதோ மாயையின் நிழல்?
தெளிவில்லா ஒரு நிலை, ஈடுபாடில்லாத முத்தம் போலே, கிளை தாவும் கடுவன் நானோ?

ஏன் என்று கேட்டு வரிசை கட்டி நிற்கும் குப்பை குப்பையாய் கேள்விகள்
தூக்கி எரிந்தாலும் சில நேரம் காந்த துகள் போல் வந்து ஒட்டிக்கொள்ளும்
கொக்கி போட்டு இணைந்து வரும் கேள்விகளை பிரித்தறிய முடிவதில்லை
சில நேரங்களில் சிரிப்பிற்கு வலிக்கும் சரியான அர்த்தம் விளங்குவதில்லை

விலகி நின்றால் இழுத்துக்கொள்ளும், நெருங்கி சென்றால்
எட்டி உதைக்கும்
இழுத்து பிடிக்கவும் தெரியவில்லை சில நேரங்களில் தூக்கி
எறியவும் மனம் வருவதில்லை

ஒற்றை தலைக்குள் பத்து தலைகளும் ஒரே நேரத்தில் கதறும்
சில சமயம் ஒவ்வொன்றும் ஒவ்வொன்று பிதற்றும் - ராவணனை
போல் வெட்டி வீசிவிடலாம் என்றால்
ஐயோ! இது வெறும் கற்பனை  குவியலாய் போயிற்றே

பைத்தியமாய் திரியும் நிலையில் கவலை  ஏதுமில்லை
சிவனாய் இருந்து பார்த்தால் நெருங்கி எதுவும் வருவதில்லை
சிவனேனு இருந்தால் தலைக்கேறி நர்த்தனமாடும் கவலைகள்

இப்படியெல்லாம் எழுதியேனும் தொலைந்த என்னை மீட்டு விடலாம்
என்ற முயற்சியில் மீண்டும் முதல் வரியில் இருந்து புலம்பித் தவிக்கும் இந்த
பாழாய்  போன மனம்!

மீண்டு வா சுயமே!

#பிடித்த விஷயங்களை பொய்யான காரணங்களை சொல்லி செய்யாமல் விட்டு நம்மை நாமே ஏமாற்றி கொள்ளுதல் பிழை...

- அஜய் ரிஹான்

கருத்துகள்