நானும் என் நிலைக்கண்ணாடியும்



எதிரே நிற்கும் ஒரு பிரதிவாதி
காணாமல் போனதாய் ஒரு குற்றச்சாட்டு
யார் என்று நான் மட்டுமே அறிவேன் 
ஏனென்றால் பதில் நானே

கொஞ்சி பேசிய தருணங்களும் உண்டு
எதிரெதிர் நின்று ரௌத்திரம் பேசிப் 
பழகியதும் உண்டு பிம்பத்தில் சிவனாய்
என்னை பிரதிபலிக்கச் செய்தவன் நீயல்லவா

உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து மகிழ்ந்தோம்
கனவுகளும் தூக்கச் சங்கிலியில் முடங்கிப்
போகாமல் சுதந்திரமாய் திரியவிட்டோம் - ஒற்றைக்
காகிதத்தில் ஓராயிரம் உலகளாவிய விஷயங்கள்

எல்லையில்லா காதல் கதைகள் கதைத்ததுண்டு
கற்பனைகள் என்றாலும் காதல் இவ்வாரெல்லாம்
முளைத்தெழுமா? என நாணும் நீயும் நானும் பேசினால்
மீண்டுமொரு கதை நெய்வோமா? தனிமையில்!

தனிமை என்னை தின்றுவிடாதிருக்க காவலாய்
நீயிருந்த நாட்கள் நான் சுகமாய் தூங்கிய காலம்
இன்றோ திசையெங்கும் உருவமில்லா காரணிகள் 
காண்கிறேன் ஒருவேளை சிறைப்பட்டேனோ? 

எங்கு சென்றாய் என தேடித்தேடி அலைந்தேன்
என்னுள்ளே இருந்து பிறந்த உன்னை எங்கெங்கோ 
தேடியது நியாயமா என கேட்கிறாய் - உன் சிரிப்பொலி 
என்னை எட்டியது அது சரி என்னின் அருவம் தானே நீ

சிரிக்கச் செய்தாய் முத்தமிடச் செய்தாய் காற்றில் 
நெடுநேரம் சிறகு விரித்து பறக்கவும், சில நேரம் 
பாயும் நதி நீரிலும், மேகங்களின் இடையே பரவியும்,
நீ செய்யாத ஜாலங்கள் இல்லை - வார்த்தையாக நாம்

உரையாடும் பொழுது பத்து வகை கருத்து உதித்தெழும்
ஒரே நேரத்தில் - அமைதி கொள் என்பேன் நான் நீயோ 
ருத்ரத்தின் தீப்பொறியென நிற்பாய் எப்பக்கம் 
சாய்வதோ நான் - நீயும் பொறாமை கொண்டாயோ?

தோழியாய் அவள் வந்தது தவறோ? நீயும் அவளை
அறிவாய் என்றிருந்தேன்! நீயில்லா நேரத்தில் அவள் 
தாலாட்டில் மயங்கி கிடந்திருக்கிறேன் - அவளும்
இல்லாமல் போயிருந்தால்? 

அலாதி இசையில் யாழின் நரம்பாய் சில காலம் 
அஞ்ஞாத வாசம் நீ வந்தெனை மீட்பாய் எனும் 
ஆசையில் - நெடுநாளாகியும் காணாது கொஞ்சம்
தவித்தே போனேன் - ஒளி கீற்றை எங்கேனும் காண்பேனா என்று!

தொலைத்ததை தேடுவதை காட்டிலும் தேடும் ஒன்றோடு
கழிந்த காலங்கள் தான் அதன் அர்த்தத்தையும் பொருளையும்
உணர்த்தச் செய்கிறது - உன்னை அறிந்த பின்னே
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் மீட்டெடுக்கிறேன் என்னிடமிருந்து

கொலைவாளுடன் என்றேனும் ஒரு நாள் என் முன்னே 
நீ நிற்க நேரிடும் கொள்வதும் நானே மாய்வதும் நானே
வெறும் 'எழுத்தென' உன்னை ஒற்றை வார்த்தையில் 
அறிமுகம் செய்தல் தகுமோ? 

துவளும் போதெல்லாம் தோளாய் வந்து நின்று விடு
சலனமில்லா பொழுதுகளில் என்னை ஆரத்தழுவிக்கொள்
காவியங்களாய் இல்லாது போனாலும் உன்னை கிறுக்கல்களாய் ஓவியம் செய்கிறேன்
உன்னோடு காதல் கொள்ள காத்திருக்கிறது பேனா முனை!

- அஜய் ரிஹான்

கருத்துகள்

கருத்துரையிடுக