புதியதோர் உலகு



பிரபஞ்சத்தின் மீதான பற்றுதலின் கடைசி எல்லைக் கோடு

நரகத்தின் நாக்கு பூமி பந்தை லாவகமாய் விழுங்கினாலும் 

கவலையாய் புன்முறுவல் செய்யும் ஆசாமி நானாய் இருக்கக்கூடும்


நாகரீத்தின் நாமத்தால் பலமுறை சுழற்சி அடைந்தும்

மிருகத்தின் வாடை மட்டும் போகவில்லை 

நாற்றம் நாசியை துளைத்தாலும் துடைந்தெறிந்து 

திரியும் மனிதக்   கழிவுகள் அதிகம் தான்


கயவரிடம் அடிமையாகிக் கிடக்கும் அறிவிலிகள்

நியாயங்களும், நியமங்களும் செப்பு பட்டயங்களில் 

காட்சிப் பொருளாகி பல்லாண்டுகள் சாட்சியம் 

செய்யதாயிற்று - நம்மை எண்ணி பெருமிதம் கொள்வோம்


அமைதி என்று சொல்லி நாம் இழந்துவிட்டது எத்துணையோ

ஆதி கால சட்டங்கள் இன்னும் நம்மை பார்த்து ஏளனமாய்

சிரிப்பது கூட கேட்காத செவிடாய் போனோமே - மாற்றம்

கண்டுகொண்டே இருக்கிறோம் மனிதன் முழுமையாய் மிருகமாவதை


பெருமையாய் பெற்ற சுதந்திரத்திற்கும் ஒரு கடிவாளம்

இல்லாமல் போனது - நாட்டிற்கும், காட்டிற்கும், சதை பிண்ட 

மனிதனுக்கும், அதை உண்ணும் விலங்குக்கும் வேறுபாடு

பிணைப்பு எப்பொழுதோ உடைந்து போனது 


உயிரின் மதிப்பு சாக்கடையிலும், மண்டிய புதர்களிலும்,

நடுநிசி சாலைகளிலும், சில சமயங்களில் கழுகுகள் கொத்தித் 

தின்னும் துண்டுகளாய் குப்பை மேடுகளிலும், புண்ணியம் 

செய்தவைகளுள் சில அமைதியாய் மண்ணுக்குள்ளும்


நில்லாது சுழலும் இவ்வுருண்டை மொத்தமாய் வெடித்து

சிதறட்டும், மனிதக் கழிவுகளோடு பொறுமையாய் சுற்றியது 

போதும் நல்லோர் யாவரும் வேள்வி தீயில் ஆஹுதி ஆகட்டும் 

தீயோர் சுவடின் துகள் கூட இல்லாமல் போகட்டும்  


இவ்வுலகில் தீமையையும், நன்மையையும் சமநிலை 

தேவை தான், எல்லைகள் மீறும் போது மாற்றம் நிகழ்வது

புதியதோர் படைத்தலின் ஆரம்பம் - சிதறிய பூமி துகள்கள் 

சேர்த்து பிறக்கட்டும் புதியதோர் உலகு.


சமூகத்தின் மீதான கோபமும், சட்டமும், தண்டனைகளும் மாற்றியமைக்கப்படாதா என்ற ஏக்கத்துடன் புதியதோர் உலகை நோக்கி 

- அஜய் ரிஹான்




கருத்துகள்