சுருக்கம் விழுந்த நெற்றியில் வரிவரியாய்
வயதின் ரேகைகள்!
வண்ணம் பூசாத பஞ்சு மிட்டாய் நிறத்தில்
நேர்த்தியான கூந்தல் கற்றைகள்!
கிராமத்தின் எல்லைகள் அனைத்தும் அலைந்து
திரிந்த அவள் கால்களில் வரைபடமாய்!
தள்ளாடும் வயதிலும் தடியொன்றை நாடியதில்லே!
பல்லுதிர்ந்த பொக்கை வாயிலும் சிரிக்க மறந்ததில்லே!
மாராப்பு ரவிக்கை அவ போட்டதில்லே, மறைச்சு எதையும் பேசியதில்லே!
தொங்கட்டான் போட்டுக்கத் தான் கொள்ள ஆசை, வாங்கித் தரத்தான் ஆளுமில்லே!
சொந்தமின்னு யாருமில்லே, சோத்துக்காக
எவன் வாசலிலும் நின்னதுமில்லே!
கூன் வயசுலயும் நிமிர்ந்து வாழ்ந்த கிழவியாச்சே!
இல்லாம கிடந்த போதும் இல்லையின்னு சொன்னதில்லே - ஒரு
குவளை மோருக்குள்ள மொத்த பாசத்தையும் ஊத்தித் தருவா!
சும்மாடு கட்டி கூடையில 'நெய்'-யை வைச்சுகிட்டு
அவ கூவிக் கூவி போன ராகம்!
இன்னிக்கும் நினைக்கையில மணக்குது, கிழவி மொகம் வந்து பேகுது
அந்த களிமண்ணு வீட்டுக்குள்ள வீணையா கடஞ்ச மத்தும்,
வெண்ணெயூறிய பானையும் அவளுக்காக காத்திருக்கு..!
ராவுல காய்ச்சிய நெய்யில போட்ட
கருவேப்பில வாசம் வூட்டச் சுத்தி கெடக்கு!
கசக்கி போட்ட நூல் சேலை காத்துல
பேயாட்டம் ஆடித் தவிக்குது!
நெய் விக்க நேரந்தான் ஆச்சு, கிழவிய பாவி
சூரியன் மட்டும் வரலியே!
விரிச்ச ஓலப் பயாயில ஒய்யாரமா படுத்திருக்கா! - கடைசியா
என்ன கனவு கண்டாளோ? சிரிச்ச மொகமா கிளம்பிட்டா!
கிழவி பேர சொல்லத்தா ஆசை! ஆனா
அவ தான் ஊருக்கே 'நெய்க்கார கிழவியாச்சே'!
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக