அன்புள்ள அன்பே



அன்புள்ள.....!

இப்படி எழுதி வெகு வருடங்கள் ஆகி விட்டது
காகிதங்களும் பேனாக்களும் முத்தம் செய்யும் 
சத்தம் மறந்தே போனது!

ஆசையை கொட்டித் தெளிக்கும் அந்தச் சாரலில்
நனைந்து திரிந்த நிமிடங்கள் கீழடிக்குச் சென்றதோ?

எவ்வளவோ செய்திகள் தாங்கி மலைகள், காடுகள், 
சமுத்திரமென கணக்கிலடங்கா தூரம் பயணம் செய்தும்
ஒரு போதும் களைத்தே போனதில்லை!

ஆனால்!! என்னை மறந்து விட்டீர்கள்! 

எல்லையில் மறைந்த கணவன்/மகன்/சகோதரர் 
செய்தியை தங்கிச் செல்லும் 'வலி'
என்னையும் அழ வைத்திருக்கிறது!

காதல் சங்கதிகள் என்னில்  மையாகும் பொழுதில் 
அளவில்லா நாணம் கொண்டதும் உண்டு!

பூப்பெய்திய செய்தி தாங்கும் வேளைகளில் காற்றில் 
பூவெனவே பறந்து மிதந்திருக்கிறேன்!

இறுக்கமாய் இரங்கல் செய்திகளும், ஊர் விட்டு ஊர் 
செல்லும் புரணிகளும், சொல்லி மகிழ்ந்த தருணங்களும்,
கேலி, நக்கல் வார்த்தைகளும் தாங்கி உலவிய காலம் அது!

பாரபட்சம் இல்லாமல் எல்லா பண்டிகைகளையும் 
கொண்டாடி மகிழ்ந்திருக்கிறன் - சில நேரம் உறவுகளை 
இணைக்கும் சிறு பாலமாகவும் உரு கொண்டவன் நான்!

அன்பானவர்களுக்காக எழுதுவதும், அவர் எழுதியதை  
படிப்பதிலுமுள்ள பேரின்பத்தை மறந்து என்னை ஒதுக்கி 
வைத்தீர்களே - இது தான் உங்கள் நாகரீக வளர்ச்சியோ?

குவியல் குவியலாய் சைக்கிளிலும், இரயிலிலும், சில 
நேரம் சொகுசாய் வானூர்தியிலும் உங்கள் ஆசைகளை/கனவுகளை
தாங்கி உழைத்தவன் - இன்று யாருமில்லாமல் தனிமையில்!

சில இதயங்கள் இன்னும் என்னை விரும்பி உயிரோட்டமாய் 
வைத்திருக்கின்றன  - சில நாடுகளும் கூட !

இருந்தாலும்...!

பரிணாம வளர்ச்சியினால் என் ஆயுளின் இறுதிக் 
காலத்தில் பயணிக்கிறேனோ என அச்சம் கொண்டேன்!

கொஞ்சம் உங்கள் வீடு பரணில், ஆசையாய் படித்து வைத்த
புத்தகங்களின் இடையிலோ  எங்கோ ஒரு மூலையில் ஏதோ
ஒரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் சந்தித்திருப்போம் 
- என்னை தேடுங்கள்!

தூசி தட்டி அதில் ஓடிக்கொண்டிருக்கும் என் மீதி ஜீவனின் 
நினைவலைகளை ஆசை போடுங்கள் - கண்ணீராய் , சிரிப்பாய் 
கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் பெறுவேன்!

சொல்லக் காசென என்னையும் நிரந்திரமாய் தடை செய்யும் முன்
உங்களை எல்லாம் அன்பாய் அள்ளிக் கொஞ்சிச் செல்லலாம் என 
'நப்பாசை' கொண்டேன். 

"நான்" யாரென்று தெரிந்ததா? இல்லையா?

ஆம்! நானே தான் - உங்கள் 'தபால்' (கடிதம்/கடுதாசி) பேசுகிறேன்!
மானே, தேனே எல்லாம் உங்கள் ஆசைபடி!

ஆசையாய் உங்கள் 'அன்பு'  நெஞ்சங்களுக்கு தூது செல்ல மீண்டு(ம்)
காத்திருக்கிறேன்!

இந்த கடிதம் என்னை படிக்கும் "அன்புள்ள" எல்லா அன்புக்கும் தான்!
இது என்னை மீட்டெடுக்கச் சொல்லி உங்கள் முன் வைக்கும் 'மனு' அல்ல - "உங்களுக்காக நான்" எழுதும் அன்பு மடல்!

பேனாவை எடுங்கள், உங்கள் அன்புள்ள அன்பிற்கு 'அன்புள்ள...' என 
எழுதுங்கள் - விரைவில் சந்திக்கிறேன் உங்கள் வீட்டு வாசலில்!

                                                              ****

* கடிதம் எழுதும் / வாசிக்கும் போது வரும்  ஒரு உணர்வு இப்பொழுது நம் உபயோகிக்கும் எந்த ஒரு சாதனமும் தராது.

* நம் குழந்தைகளுக்கு கடிதம் எழுத சொல்லித் தாருங்கள், அது உங்களுக்காக கூட இருக்கலாம். உங்களை நீங்களே தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்.
* நேரம் இருந்தால், உங்கள் வீட்டு கடுதாசி என் கதவுகளையும் தட்டட்டும்.

- காத்திருக்கிறேன் உங்கள் கடிதத்திற்காக!

 - என்றும் அன்புடன்

"உங்கள் நான்
(அஜய் ரிஹான்)


கருத்துகள்