ஏலியன் பெண்ணே



 மாலை இரவின் கடைசி மேகத்தை கிழித்துக் கொண்டு
ஒளிக்கீற்றாய் பறக்கும் தட்டொன்று இறங்கக் கண்டேன்
மின்மினிப் பூச்சிகள் சின்ன சின்ன குவியலாய்  
நேர்த்தியான அரை வட்டத்தில் ஒளி வீச

வீட்டை சுற்றிய செடி மர இடைவெளியில்
கருநிற வானத்தில் சட்டென வாய் பிளந்து
நிலா பாய்ச்சிய ஒளியென சாளரம் வழியே
அறை  முழுதும் மரகத வெளிச்சம்

சலசலக்கும் இலைகளின் ஓசையும்
இதுவரை கேட்டறியா இயந்திர பேரொலியும்
பதுங்கிய புலியின் உருமல் போலவும் - தூரத்தில்
கேட்கும் கொல்லன்  பட்டறை சம்மட்டி சத்தமும் ஒன்றாய்

மலை மரங்கள் புயல் காலத்தில் ஓவென இரையும்
காற்றின் மெல்லிசை இடையே - பேசிக்கொள்ளும்
வார்த்தைகளின் கால அளவில் அலைவரிசையாக
ஒலி மாற்றம் செய்யப்பட்ட உரையாடல் மெல்லிய டெசிபலில்

வலமிருந்து இடமாய் ஒன்றும் அதன் நேர்மாறாய்
இன்னொன்றும் சக்கர வடிவில் ஒளியின் சரிபாதி
விகித வேகத்தில் சுழன்று கொண்டிருக்க - சில்லிடும்
ஒரு அமைதி, அந்த மரகத வெளிச்சத்தில் ஓர் 'கிளாடியஸ்'  மலர்

காற்றில் மிதக்கும் பூவை முதல் முறை பார்க்கிறேன்
இதுவரை நுகர்ந்திடா மனம் அது சொல்லில் அடங்காது
'அது ' என்று சொல்லிட மனமில்லை 'அவள்' என்றேன்
பெண்மையின் இலக்கணம் புது வடிவில்!

 ஒளிந்திருந்து பார்த்த அந்த முகம் இதுவரை
கேட்டறிந்த கதைகளில் வரும் 'ஏலியன்' போலில்லை
பூமியை படைத்தைவன் இவளை பார்த்திருந்தால்
ஆதி முதல் பெண்ணிற்கு இவள் சாயல் இருந்திருக்கும் !

கழுத்து வரை மட்டுமே வளர்ந்த செந்நிற முடி - சுதந்திர
ஆடைகள் சூடிய தேகத்தில் அழகின் அளவுகள்!
இனமென்பதே அறியா அவள் நிறத்தில் மின்னும்
நட்சத்திரங்கள் - தரையில் பதிந்தது அவள் கால்கள்

கண்கள் கருவிழி அழகென நானெழுதிய வரியெல்லாம்
பிழையென போனது - இமையின் மேலும் கீழும்
நீல நிறம், வட்ட விழியில் இரண்டடுக்கு கருப்பும், நீலமுமாய்
மையத்தில் மின்காந்த உருளைகள் - ஈர்ப்பு விசையில் நான்

வீசும் காற்றில் என் மூச்சுக்காற்று அவளை தொட்டதோ
விழிகள் நான்கும் நேர்கோட்டில் - கண்களில் பயமில்லை
அவளுக்கு - தலை முதல் கால் வரை அவள் கண்கள் ஆராய
முதல் அடி வைத்தது என் கால்கள் அவளை நோக்கி

அவள் என்னை தடுக்கவில்லை, இதய துடிப்பின் அலை
வரிசை உமிழும் வெப்பம் வைத்தும் நான் இந்த கிரகத்தில்
வாழும் மனித உயிரினம் என்பதை அறிந்திருக்கக் கூடும்
பறக்கும் தட்டின் ஒளியில் அவள் இன்னும் பேரழகு

என் உதடுகள் மெல்ல விரிய, ஊறிய திராட்சை ரசத்தின்
நிறத்திலிருந்த அவள் உதடுகள் அளவாய் விரிந்தது
ஏதோ சொல்ல எத்தனிக்க, அவள் கைகளில் சிறிதாய்
இரண்டு கருவிகள் - ஒன்று என்னிடம்!

அலைபேசியுடன் அந்த கருவி இணைந்தது - எண்ண
அலைகளாய் அவள் எனக்கனுப்பிய குரல் செய்தி
'நான் அதாரா, உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி'
ஏன் என கேக்க ஆயிரம் கேள்விகள் என்னுள்

எண்ண அலைகள் சிதறிக்கொண்டிருக்க மீண்டும்
'நெப்டுனியும்' தேடிக் கொண்டிருக்கிறோம் பூமியில்
உனது இந்த ஞாபகங்கள் சிறிது சிறிதாய் முற்றிலும்
மறையும் - புரோட்டான், நியூட்ரான் எதிர்வினை நெஞ்சுக்குள்

நிலவுக்கும் சூரியனுக்கும் இடையான சமநிலை நாம்
ஒளிக்கீற்றாய் நானும் மாறி உன்னுலகம் வந்து சேரவா?
நேர சுழற்சியில் இத்தனையும் முதல் மழைத்துளி
மண்ணை சேரும் இடைவெளி - போகாதே  நீ அதாரா!

அவளை பற்றிய என் எண்ணங்களை அவள் படித்திருப்பாளா?
அணு சிதறலாய் உருவெடுத்த உணர்வுகள் அவளை தாக்கி
இருக்கக் கூடுமோ? என்னை ஊடுருவிய அந்த நீல நிற கண்கள்!
இமைக்கும் இடைவெளியில் புறக்கோளம் தாண்டி பறக்கும் தட்டு!

நட்சத்திரங்கள் மறைந்தது, கிளாடியஸ் வாசனையும் போனது!
காற்றை கிழிக்கும் சப்தமும், மின்மினி வெளிச்சமும் இல்லை!
சாளரம் வழியே வானை நோக்கிய என் கண்கள்!
அலைபேசியில் ஒலித்தது - நான் அதாரா...

அவள் என் வாழ்வில் என்றும் ஓர் மரகத வெளிச்சம்!

- அஜய் ரிஹான்

 

கருத்துகள்

கருத்துரையிடுக