முரண்


 

முரணின் உருவம் ஒரே பிம்பத்தில் பிரதிபலிப்பதில்லை
வேற்றுமை நிறைத்து எதிரெதிரே நிற்கும்

சாதகம் தன் பக்கமேயென இரு தரப்பும் வாதிடும்
சமநிலை யாதென்று அறியாது சிரிக்கும் மூடர் கூடம்

முகமூடி பொய்யென்றுரைக்கும்
போலியாய் சிரிக்கச் சொல்லும்

ரௌத்திரம் பழகச் சொல்லும்
ஊமையாய் வாழச் சொல்லும்

பொதுநலம் கருத்தில் நிற்கும்
சுயநலமே பெரிதென நிற்கும்

முடிவென்ற இடத்தில் முதலும்
முதலென்ற இடத்தில் முடிவும் முரண்

சமயங்களில் உண்மைகள் பொய்யாகும்
அதுவே மெய்யென்றும் உருமாறி நிற்கும்

சட்டம் பேசும் சாணக்கியம்
சில நேரம்
சாக்கடையிலும் முளைத்தெழும்

தான் எனும் எண்ண ஓட்டத்தில்
மழுங்கிப் போகும்
அறிவும் முரணின் நகலே

சுத்தம் செய்ய வழியிருந்தும்
நாற்றம் சகித்து முகம் மூடிச்
செல்லும்  'ஏன்' எனும் முரண்

மரத்தின் நிழலில் செதுக்கும் நாற்காலி
உளிக்கு அது வேலை
அது இன்னொரு மரத்தின் மரணம்

இயல்பென்றாலும் நியதியென்றாலும்
படைத்தலின் காரணி அதுவே என்றிருந்தாலும்
அதற்கும் முரண் என்று ஒன்று சேர்ந்தே ஆக்கம் பெறுகிறது

பார்வை நானென்றும் தனதென்றும்
சுழலும் வரையில்
முரணின் கோட்பாடுகள் மாறப்போவதில்லை

நீயும் நானும் எதோ ஓர் புள்ளயில் முரணே!

- அஜய் ரிஹான்

கருத்துகள்

கருத்துரையிடுக