செங்காந்தள் மலரே

Senganthal
 
அவள் முகம் அறியாதோர்க்கு
அவளை அறிமுகம் செய்வது எப்படி?
என்னவள் என நான் கொண்டாடி தீர்க்கும்
அவளே என் முகவரி, இதோ இக்கவிக்கும்
அவளே முதல் வரி

பாரதி நிரப்பாது விட்டுச் சென்ற
வெள்ளை காகிதங்களின் அரசி இவள்
அவன் வைத்த இறுதி  முற்றுப்
புள்ளியில் முளைத்த என் முகை கவி இவள்

அவளை காணும் வரை வண்ணங்களில்
ஈர்ப்பேதும் இருந்ததில்லை - வானவில்லானாள்
கோடி பட்டாம்பூச்சியின் வண்ணம் பூசிக்
கொள்கிறேன் தினமும் அவள் விழி காண்கையில்

தேவதைகளின் நிழலில் பூத்த பூக்கள் எடுத்து
உருகிய நிலவின் பாலில் சேர்த்தரைத்து
அவள் தேகம் முழுதும் சில நேரம் ஆடையென
வாழ்ந்து பின் உதிர்ந்த துகள்கள் வானின் நட்சத்திரங்கள்

அவள் குழல் நடந்து வரும் திசையெங்கும்
காற்றோடு  கதை பேசி வரும் - நைல் ஆற்றில்
பூக்கும் வெண்ணிற அல்லியை போல அவள்
பாதம் - அதன் கரைகளில் செங்காந்தள் தோட்டம்

முதல் முறை அவள் இதழ் கொண்டு பெயரை
சொன்னாள் - யார் என்னை அழைத்தாலும்
ஒலிப்பது  என்னவோ அவள் குரல் - தோடி ராகம்
வீணையில் மீட்டிக் கேட்டது போல் பேரின்பம்

திமிரும் என் ஆசைகளை எல்லாம் கட்டிப்
போட்டுவிடும் ஒற்றை கடிவாளம் அவள்
புன்னகை - மெல்லிய வளைவுகள் தான்
கூர் தீட்டிய பூவிதழ் அவள் இதழ்கள்

அவள் இமையோரம் வழியும் மை
கொண்டு என் ஆசை மீசை கருமை
பூசிக்கொள்ளும் - அவளின் மீதம்
சொல்லி விட்டால் இலக்கணம் கர்வம் கொள்ளும்

சொல்லிச் சொல்லி பார்க்கிறேன் அவள்
பெயரை பிழையில்லா சந்தம் சேர்ந்து
கொள்கிறது - ஆழிப் பேரலையின் முதல்
அலை அவள் கோபம் - இருந்தாலும் இன்னும்
மழலை அவள்!

இன்னமும் சொல்லத்தான் ஆவல்
அவளை பற்றி - எண்ணமெல்லாம் அவளானாள்
வார்த்தைகள் முட்டி மோதிக்கொள்ள
மௌனமாகி போகிறேன் - என்னுள் அவள்

அவள் என்னவள்!

- அஜய் ரிஹான்

கருத்துகள்

கருத்துரையிடுக