மெல்ல எழுந்து கொள் என் தமிழே!
உறங்கி கிடக்கும் எழுத்துக்கள்
உயிர் பெற்றுக்கொள்கிறது
நீ என் மெய்யாகும் பொழுது
கனவுகளில் வாழ்ந்த நாட்களில்
கவிதைகளின் உயிரானாய்
நீயே என் உயிரென ஆன பின்
கவிதையை நான் தேடுவது எங்கேயோ?
எவருக்கும் எடுத்து சொன்னாலும்
நம் உறவு புரியாது - உனக்கும் எனக்கும்
மட்டுமே விளங்கும் புதிரானது
யாரோ நீ? யாரோ நான்!
நெடுந்தூரம் நடந்ததில்லை நீயும் நானும்
இருந்தாலும் பயணித்த தூரம் அளவில்
சிறிது இல்லை - அரிதாரமில்லா பேரழகு
நேற்றும், இன்றும், நாளையும்
திங்களும் ஞாயிறும் வந்து மறையும்
தினமும் - மறையாது உன் முகம் மட்டும்
பிரபஞ்சத்தின் இரகசிய கதவினை திறக்கும்
மந்திர திறவுகோல் உன் புன்னகை
மரணம் வரை சென்றாலும்
மறுமுறை உன்னை காண
மனு ஒன்று வைத்து வருவேன் - மறுத்தால்
மீண்டுமொரு ஜனனம் வாங்கி வருவேன்
மௌனமாய் நீ இருந்துவிடும் பொழுதுகளில்
முடியாதென்று தெரிந்தும் கோடி முறை
கொன்றுவிட துணிந்தேன் நேரத்தை
நொடி கூட சாபம் தான் நீயில்லாமல்
நீ நடக்கும் பாதைகளில் விட்டுச்
செல்லும் வரிகள் தோறும் தேடிப் பார்க்கிறேன்
யாரோ என்ற முகமூடியை உடைத்தெறியும்
காரணத்தை - நாம் யாரோ இப்பால்வெளியில்
யானும், யாவுமாய் ஆனாய் நீ!
இருளும் அதனை கொல்லும் ஒளியும் நீ!
நிழலும் எந்தன் நிஜமும் நீ! - இருந்தும்
நீயும் நானும் இன்றும் யார் யாரோ
என்னில் வெட்கம்
உந்தன் பெண்மை
சேரும் வண்ணம்
இது பூமிக்கு புதிது - அரிது!
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக