புரியாத புதிருக்குள் புதிதாய் தெரிகிறது
இந்த வாழ்கை தினமும்; எத்தனை கலங்கரை
விளக்குகள் ஞான ஒளி பாய்ச்சினாலும், சில
பாதைகள் மானுட அறிவிற்கு புரிவதே இல்லை
வியந்து கொண்டே தான் போகிறேன்
எத்துணை வினோதம் நிறைந்தது இது என்று
கலைந்த பிம்பம் ஒன்று சேர்வதே இல்லை
ஓடும் ஆற்றினில் தெரிவது போல்
'இருத்தல்' என்ற வார்த்தையின் பரிணாமத்தை
ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் பார்வையில்
பார்க்கும் போது அறிவின் முதிர்ச்சி காலத்தின்
காதுகளில் பொருளுரைத்துப் போகும்
விஞ்சி நிற்கும் விஞ்ஞானமும் விரல் நுனியில்
தொட்டு விடும் தூரத்தில் அறிவியல் நுட்பமும்
அணி வகுத்து வந்தாலும் இன்றும்
ஆறாம் அறிவிற்கு புலப்படாத ஒன்று
இப் பிரபஞ்சத்தில் ஓர் அணுவாய், ஒளி கதிராய்,
ஓர் துகளாய், எதோ ஓர் வடிவில் இன்னும்
உறங்கிக் கொண்டு தான் இருக்க செய்கிறது
ஓயாத தேடல் மட்டுமே காணாத ஒன்றை காணும்
ஓர் இலை தன் நிலையில் இருந்து உதிர்ந்து, பறந்து
மண்ணை சேரும் இடைவெளியில் அத்தூரத்தை
இன்னிசை பாடி மகிழ்ந்து கடக்குமேயாயின், அப்பயணத்தின்
மாத்திரை நொடியின் கோடி பிளவில் ஓர் துகளானாலும்
மறுகணம் அஃது சுக்கு நூறாயினும் - அது ஓர் நினைவாகும்
எதை நோக்கிய பயணம் இது என்றறியா நகர்தலிvaல்
நாம் நிறைத்துச் செல்வது வெறும் வெற்றிடங்களை
மட்டுமே - எதை கொண்டு என்பது இறுதிவரை அறியாது
வாசற்படி எங்கும் ஓர் முகமூடி, பழையன, புதியன
என்று மாற்று மாற்று நிறங்களுடன் - சில
இடங்களின் வானவில்லுக்கும் அதிகமாய்; முகமூடியின்
முன்னுரை 'வர்ணம்' இல்லையென்றுரைக்கும்
இச்சைகள் தின்னும் எண்ணத்தின் எச்ச்சைகளின்
நாற்றம் திசைக்கொன்றாய்; நாற்றமில்லா
மேனியை ஞானி என்பார் - இவ்வுலகில் ஞானியை
'காவி' யென்பார் வானம் பார்த்து எச்சத்தின் ஈர்ப்பு விசை கணிப்போர்
வீட்டில் வளர்க்கும் அன்பு கொண்ட பிராணியின்
சுதந்திரம் சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் - சில
நேரம் ஆசைகளும் அப்படியே - ஐந்தறிவு ஆறறிவாவதும்
ஆறு ஐந்தாவதும் சமநிலை தவறிய பொழுதுகள்
நாளை நிச்சயிக்கப்படாத உயிர்களுக்காக நேரம்
ஒரு போதும் தாமதிக்கப் போவதில்லை - எத்துணையோ
அண்டங்களில் நாமறிந்த 'பூமி' ஓர் புள்ளியே
ஏனோ இன்னும் விசித்திரமாகவே தெரிகிறது
வாழ்க்கை - ஆனால் சற்று புதிதாய் புரிதலின் தொடக்கத்தில்!
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக