பலருக்கும் நித்தம் ஒரு வானம்
பல வண்ணங்கள், சில புன்னகை
துளி கண்ணீர், கதிர்கள் தீண்டும் பகல்கள்
இவையெல்லாம் கண்டீராத ஓர் உலகில் அவள்
காலம் இருள் போர்த்திக் கொண்டால்?
சுற்றியுள்ள இலைகள்,மரங்கள், ஏன் வண்ணத்து
பூச்சிகள் கூட அவள் கண்ணில் பூசிய மையின்
ஈரத்தில் வழிந்த நிறமள்ளி அப்பிக்கொள்ளும்
அப்படி ஓர் கருமை!
வாசலில் பூத்திருக்கும் பூக்கள் கூட அவள்
கடந்து போனால் அவளோடு ஒட்டிக்கொள்ளும்
அப்படி ஒரு காதல் - பூக்களுக்கு அவள் மீது!
இரவில் மட்டுமே பூக்கும் பூவுக்கும் அவளுக்கும் ஓர் ஊடல்!
ஊரில் அவளுக்கு ஆயிரம் பெயர் உண்டு
அவரவர் பார்வையில் அவளை பெயர் சூட்டிக் கொள்வர்
அவள் முகவரி மட்டும் அனைவர் உதட்டிலும் ஒட்டி இருக்கும்
கள்ளமும், கள்ளும் சேர்ந்து கொள்ளும்
அவள் பெயரை சொல்லும் போது!
காலையில் இரைந்து ஹோவென ஓடும் நதி நீர்
இரவில் சிவப்பாய் நிலவின் பிம்பம் சலனமற்ற நதியில்
கரையெல்லாம் கொத்துக் கொத்தாய் பூத்த மல்லி
நேராய் வீட்டு சாளரத்தின் வழியே அவளை தீண்ட காத்து நிற்கும்!
அவள் முகவரி தேடி வந்தோர் யாரும் 'முகம்' காட்டியதில்லை
அவர்கள் முக-மூடி கொள்ளையர்கள் - தினமும் கொள்ளை
போகும் அவள் வீட்டில்!
மானம் என்பார் அக்கம் பக்கத்தினர்!
'பசி' என்பாள் அவள்!
காலையில் வீட்டு வாசல் கோலத்தில் 'பரங்கிப் பூ'
இரவின் நீளம் எத்துணை கொடியதாய் இருக்கும் அவளுக்கு?
மீள் வலி இல்லா தினம் கொல்லும் கனவின் சுமை - ரணம்;
வலித்தாலும் சிரிக்கும் அவள் புன்னகையின் ஆழம் எதுவோ?
மைய ரேகை சென்றாலும் அது முதல் புள்ளியில் தான் நிற்கும்!
முடியா நேரங்களிலும் கதவின் தாழ்பாள் பதறும் சத்தம்
காரணம் ஆயிரம் சொன்னாலும் புரியா கள்வர்கள் மறுமுனையில்
மனித மிருக வேற்றுமை தொலைந்ததை பறை சாற்றும்
கட்டில் கால்கள் - அஃறிணை ஆவது யாரோ இங்கு?
உடைந்த மேற்கூரை ஓட்டின் வழியே வானத்தின் ஓர் பாகம்
அது மொத்தமும் சிகப்பாய்..நடுவே ஓர் நட்சத்திரம்
சிரிக்கிறாள்..! கண்ணீர்..! நனைந்தது தலையணை..!
அவ்விருட்டிலும் பிரகாசமாய் ஒற்றை ஜோ'தீ' - அவள்
கொடியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கந்தல் புடவைகள் - கண்சிமிட்டி 'கிழிந்தும் ஆடுகிறோம்
நீயும் நானும்' என்பாள் கவிதையாய்! காற்றும் மௌனமாகும்
வெற்றுக் கால்களில் மெல்ல ஒலிக்கும் கொலுசு சப்தம்!
நியாய தர்மங்கள் சொல்லி சாயம் பூச அவள் நிறங்களுக்குள்
அடங்காதவள்
கருப்பு வெள்ளைக்குமான சமநிலை அவள்!
அவள் அவளாகவே இருக்கிறாள், இருப்பாள்
நேற்றும்-இன்றும், ஏன் நாளையும்
'இரவில் பூத்த 'மல்லி'யாக!
- அஜய் ரிஹான்
கிழிந்தும் ஆடுவது... சமூகமும் தான்..
பதிலளிநீக்கு