என் அப்பன் அல்லவா


Lord shiva

 

இறைபணி செய் தேதொழுது நின்றேன்
யான் உனை நினைத்து - சிறுவன்
உற்ற பிழையா தெனயறியேன் -  மா
தவம் புரிகிலேன் எனினும் இடர்
இழைத் துயிர் இன்னல் ஈயும் நீசன்
அல்லேன் - எந்தை ஈசன் மைந்தன் நான்

நினைத்தே உருகி மருகி நின்றேன்
நீளும் இடைவெளி நெடுகிலும்
உறைந்த கண்ணீர் துளிகள் - செல்லங்
கொஞ்சும் குழந்தையாய் நீயும்
குன்றில் குன்றாது ஒலிக்கும் வேத
பிரணவத்தின் மயக்கத்தில் நானும்

ரௌத்திரத்தின் ருத்ர உருவே குருவே ஆரா
தனை பொழுதிலும் ஆலிங்கனம்
செய்தே பழகிய தொண்டன் - கணம் நான்
சொப்பனத்தில் வந்த கரு நீல ஆகாயம் பிழி
வண்ணம் பூசிய அம்பலவான ஜோதியே
கண்டேன் கண்டேன் பிறப்
பறுக்கும் என்னப்பன் திருவருள்

துறந்தேன் உடல், உயிர், உறவெனும்
மாயை யாவையும் மீண்டு எழுந்தேன்
அம்மணத் துறவியாய் - பறவையின் கூட்டிற்குள்
புகுந்தேன் - சாம்பல் புழுதிக்குள் அனைத்தும்
அடக்கமே யாவும்

சித்தம் தெளிந்தே திரியும் காற்றடைத்த
பையை பெயர் பல சூட்டி மகிழும்
மானுட மந்தைகள் சுட்டெரிக்கும் திரு
நீர் நெற்றியில் ஒளிந்திருக்கும்
தத்துவத்தை யாதென்று உரைப்பேன்?
ஏதும் அறியா இக்கூட்டத்திற்கு பேரொளியை!

ஞானம் பெற்றதும் ஞாயிறு வந்ததும்
யாக்கை எரிந்ததும் யாவும் ஒன்றென
நின்றதும் பொற்பதம் தொட்டதும்
பொன்னம்பலம் கண்டதும்
எல்லாம் அவனே எதிலும் அவனே
மீண்டு வந்தவனை மீண்டும்
பிறவாது ஆட்கொள் (ஆல)வாய் 

எம்பெருமான் எந்தை ஈசனே!

 

- அஜய் ரிஹான்


கருத்துகள்