சேராத கைகளுக்கெல்லாம்
காற்றிடம் பேச அனுமதி இல்லை
பார்க்காத பார்வைக்கெல்லாம்
பகல் இரவு பேதமில்லை
மீண்டும் ஒரு முறை காதல்?
ஹஹா...!
அதற்க்கெல்லாம் ஏது நேரம்?
ஞாபக தீயில் வெந்து வேகும் இடைவெளியில்?
'போ' என்றாலும் நகராது காத்திருக்கும் கால்கள்
'வா' என்றதும் சிறகாகும்!
அழகாய் அழகழகாய் அடம் பிடிக்கும்
குழந்தையாய் அவள் மாறிப் போவாளே!
இதழ் குவித்து கண்கள் உருட்டியே
என்னை மிரட்டும் பேரழகி அவள்!
நொடிக்கொரு முறை காரணம் சொல்லவா?
அவளில் மீண்டும் மீண்டும் காதலுற!
என் மீது கோபமுற..
என் தலை கோதி விளையாட..
என் கழுத்தெங்கும் அவள் நகக்கீறல்கள்..
என்னுள் முளைக்கும் ரௌத்திரத்தையும்
அவள் கொஞ்ச செல்ல பொம்மையாக்கினேன்!
இதை எதையும் அவள் செய்ய கேட்டதில்லை!
அவள் சொல்லித் தான் செய்ய வேண்டுமா என்ன?
எழுதித் திருத்திய விதி என் வாழ்வு
அவள் வெள்ளைக் காகிதம்
ஆசையாய் நிரப்பிக் கொள்ளவா?
என் ஆசைகளை அவள் பெயரெழுதி?
சமயங்களில் அவள் பசியறியும் தாயுமாவேன்
அதிசயமாய் நேரங்களில் அவள் கால்கள்
எனக்காக நடக்கும் , ஓடும்..
நானாய் கேட்டால் சிலையாகி போகும்!
அதையும் ரசிப்பேன் - அதுதான் அவள்
பக்கம் பக்கமாய் மை தீர சொன்னாலும்
யாரோ யாரோ தான் நானும் அவளும்
இருந்தாலும் இன்னும் கொஞ்சம்
அவள் அருகில் பறந்தே திரிகிறேன்..
முடிந்து விடாத இரவில் போட்டாபோட்டி
எனக்கும் சூரியனுக்கும்..
அவளை முதலில் பார்ப்பது யாரென்று!
அழகிய பக்கங்கள் அவள் தந்தது
கோபம், கண்ணீர், புன்னகை, எல்லாம் கலந்து!
முதல் காதல் அவளில் தொடங்கி
அவளிடமே முற்றும்...
நானில்லா உலகமும் சுழலும்..
அவள் காணும் திசையெங்கும்
நிரப்பி வைத்த ஞாபகங்கள்..
சுற்றி திரியும்!
நானும் பார்த்து சிரித்திருப்பேன்..
அவள் கண் வழியே!!
மீண்டும் வந்தாலும் வருவேன்..
அவளுக்காக, அவளிடமே!
ஆகவே என்னிடம் இப்போதைக்கு காதல் Stock இல்லை..
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக