காயம் ஆறிய பின்னும் ஆறாத நினைவுகள்
தூக்கம் கலைந்தும் விடாது துரத்தும் கனவுகள்
கண்ணில் தென்படும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை
அவளை மறந்துவிட முடியுமா இன என்னை நானே
கேட்டுக்கொண்ட கேள்விகளின் கணக்கு!
சுலபமாய் கடந்து போயிருக்க முடியும் இவளை
அவள் கடக்கும் போதெல்லாம் இதயம் ஒரு நொடி
துடிக்க மறக்காமல் இருந்திருந்தால்!
அவள் என்னவள் என நினைக்கும் பொழுதெல்லாம் உயிர்
வேறெங்கோ ஓர் உலகில் உலவாமல் இது
மாயை எனச் சொல்லி இருந்தால்!
கடந்து போயிருப்பேன் காதலையும், வலியையும்!
முற்றும் என முடிந்த கதைகளின் முன்னுரை கேட்பாரில்லை
முகம் ஒன்றே கதையின் முகவரி என்றானால்?
அதுவும் அவள் முகம் என்றானால்!!
என்னாவேன்? முதல் முறை பார்ப்பது போல் தினம் பார்த்திருப்பேன்
நிலவும் மலரும் உவமைகளை தோன்றவில்லை அவளை பார்த்த பின்பு!
வண்ணங்கள் மீது ஈர்ப்பேதும் இல்லை எனக்கு
ஆனால் நானோ நானாக இல்லையே!
நிறமறியா குழந்தை கண்ணில் படும் முதல் வெளிச்சம் போல்
ஒவ்வொரு வண்ணமும் அப்படி ஒரு அழகு
வண்ணச் சிறகுகள் நடுவே அழகாய் அவள் ஓர் 'பட்டாம்பூச்சி'
மிளிரும் தேகம் வெண்ணிலவின் நிறமறிந்தேன்
இமையோரம் வழிந்தோடும் கருமை இரவின் நிறமென்றறிந்தேன்
தாமரையின் நிறம் இதுவெனவோ என யூகித்தேன்
அவள் 'பாதம்' தொட்ட பின்பு - புதிதாய் பூக்கும் ரோஜாக்கள்
அனைத்தும் அவள் இதழின் நிறத்தில் துளி கூட இல்லவே இல்லை
என்னை நானாகவே பிரதிபலிக்கும் அதிசய கண்ணாடி அவள்
மழையாய் அன்பை பொழிந்தும் செல்வாள்
சமயங்களில் கடந்தும் செல்வாள் - 'மேகமோ அவள்'
அவள் சிரிக்க ஒரு முறை பார்த்து விட்டால்
பேரதிசயங்கள் யாவும் அதிசயிக்காது வியக்கிறேன் தினமும்!
முடியா இரவாய் விடியும் வரை நீளும் பொழுதுகள்
மெய்யான கனவில் பொய்யான காட்சிகள் இருந்தும் ரசிக்கிறேன்
என்னவள் எனக்கு மட்டுமே! 'அவள் அவளாகவே இருக்கட்டும் '
நாள் ஒன்று வருமென்று தெரியும், பிரிவின் இரு
முனையில் 'நீயும் நானும்' புன்னகைத்தே பிரிவோம்
நினைவுகளில் நினைத்துக் கொள்வேன் எப்பொழுதும்
ஆசைத் தலையணை அவ்வப்போது புன்னகைக்கும், கண்சிமிட்டும்!
உன் முன் நெற்றியின் சுருக்கங்களை கற்பனை செய்வேன்
நாளை விடியல் இல்லையென்ற ஓர் இரவில்
உறக்கம் துறப்பேன் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஒரு முறையென
உன் முகம் பார்த்து விடை பெறுவேன்
நீ என் வாழ்வின் 'பாட்டாம்பூச்சி விளைவு'
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக