வீடெங்கும் அதே பேச்சு தான்
அவ தேடி அலைஞ்சு ஓஞ்சு தான்
இங்க சொல்ல வந்திருப்பா
ஆச ஆசையா பெத்த புள்ள
எங்க போச்சோ தெரியலையே
காலச் சுத்தி சுத்தி வந்திருக்குமே
காலை முதலா காங்களையே
ராவுல உடம்பெல்லாம் சகதின்னு
விளையாட்டா ஏசிப்புட்டேன் அதனால
தானோ ஏறெடுத்தும் பாக்காம போயிருச்சோ?
தெரிஞ்சா வழி முச்சூடும் உன்
வாசம் வருதான்னு கால்
நோக தேடிப்புட்டேன் பிஞ்சு
கால் அச்சு கூட அகப்படுலியே!
பெரும் பாதத்தில் மறைஞ்சு போச்சோ கருப்பி!!
பாவம் பாத்து விட்ட குஞ்சு எலிகிட்ட
வெவரம் கேட்டேன் பாக்கலியேன்னு
சொல்லிப்புட்டு சட்டுன்னு ஓடிருச்சு!
ஒசரத்துல இருந்த குருவி கூட
இறங்கி வந்து அதையே சொல்லுச்சு!
தூரத்துல நின்னாலும் பசின்னு நீ வருவ!
வயிறு முட்ட நீ குடிச்சு ஒறங்கிப் போவ!!
ஊர் கண்ணு பட்டுச்சோ யார் கண்ணு பட்டுச்சோ
நாளோன்னு ஆயிருச்சு போன நீயும் வரலியே?
வாசலுலயே காத்திருந்தேன் புள்ள வந்தா பசிக்குமேன்னு!
பிரசவம் நாலு ஆயிருந்தும் தங்கி
வந்தது ரெண்டு, ரெண்டு தான்
மொத ரெண்டும் போன இடத்துல
பொழச்சுக்குமுன்னு பெருமூச்சு விட்டிருந்தேன்!
கருப்பியும் சாம்பலும் இருக்கட்டுமேன்னு
வீட்டுல பேசிக்கிட்டாங்க இப்படி
ஆகுமுன்னு நெனச்சு கூட பாக்கலியே
புள்ளய தொலைச்சுட்டியேன்னு கேட்டா
சொல்ல பதில் இல்லையே-ஒன்னொன்னா ரெண்டும்
போச்சே இப்போ, கருப்பும் வெள்ளையும் சமமாச்சே!
சமையல் அறையில் திருடி தின்ன
கணக்கெல்லாம் சொல்லி சிரித்தார்கள்-கருப்பி
இப்போ திருடி தின்ன ஆளில்லாமல்
கட்டெறும்பு மொச்சு கெடக்கு - ஆளுக்கொரு
கிண்ணியில் உத்தி வெச்ச வெச்ச பாலும் ஆடை பூத்து போச்சு!
உனக்கு பயந்து ஒளிஞ்ச நாய் குட்டியும்
ரெண்டு நாளா வெச்ச சோத்த கூட சீந்தலியே!
போற தூரம் சொல்லி இருந்தா மூச்சிரைக்க
கூடயே வந்திருக்குமே கருப்பி!
எங்க தான் போனாயோ அவ்வளவு அவசரமா?
கருப்பிய கவ்வியது சிறுத்தை-ன்னாலும்
ஒத்தைக்கு ஒத்த நின்னு இருப்பா!
உயிருக்காக ஓடி இருந்தாலும் கடைசியா
சாவையும் ஒரு முறை நின்னு பாத்திருக்கும்
கருப்பியோட கண்ணு - வீரமாதான் போயிருப்பா!
சாம்ப குட்டி போயி நாளோன்னுல இப்போ கருப்பியும்
வாய தொறந்து சொல்ல தெரியாம தான்
காலை சுத்தி சுத்தி வந்திருக்கா 'அம்மா' பூனை
பால்காரன் வர்றதுக்கு முன்னே பாலுக்கு வந்து நிப்பா
இப்போ ஆள காணோம் இரண்டு நாள் ஆச்சு!
அவளும் கேட்டு சலித்து போயிருப்பாள் 'கருப்பி வந்தாளா'?
பூனை ஆனாலும் அம்மா-வாச்சே
கருப்பி போன இடத்துக்கு கூட்டிப் போகச் சொல்லி
சிறுத்தைக்கிட்ட சீறிக்கிட்டு நின்னு இருப்பா
கருப்பி-க்கு பசிக்குமேன்னு!!
- அஜய் ரிஹான்
கருத்துகள்
கருத்துரையிடுக