பரப்பிரம்மம்

எதை கண்டு கலங்குகிறாய்? | நிஜம், நிழல், கர்மம் பற்றிய கவிதை
கிருஷ்ணா

எதைக் கண்டு அஞ்சுகிறாய்?
எதை எண்ணி கலங்குகிறாய்?

நீ நினைப்பது போல் இந்த உலகம் இல்லை...
கற்பனையில் நிஜத்தை தேடுகிறாய்...
நிஜம் எது??
நிழல் எது??
வேறுபாடே தெரியாமல் எதைத் தான் தேடுகிறாய்??

இங்கு கொடுக்கப்பட்டவையும்...
உன்னிலிருந்து எடுக்கப்பட்டவையும்...
எதுவுமே உன்னால் நடத்தப்படவில்லை...
பெற்றதை வாழ கற்றுக்கொள்...

ஆக்கமும் உன்னில் இல்லை..
அழிவும் உன்னில் இல்லை...
வாழ் என்றே அனுப்பி வைத்தேன்...
சிந்தித்துப் பார் எதை நீ தொலைத்தாய் என்று...!!

மூடர்க்கு வெளிச்சம் இருட்டாய் தெரியும்...
கரைத்து அழித்து கற்ற கல்வியும் கல்லாய் போகும்...
மூளையற்ற வீனர்களின் வெற்றுச் சொல்லும்...
உன்னை அதள பாதாளம் நோக்கி இட்டுச் செல்லும்...

சில நேரங்களில் பாவத்தின் பாதையில்
பயணிப்பவரை திருத்த முயற்சிப்பது
அதர்மம் - விதி அதன் வழியில்
தீர்வளிக்கும் அதுவே கர்மத்தின் தர்மம்..

சிறியவர் யார்??
பெரியவர் யார்??

பட்டங்கள் மாறி தலையில் கிரீடம்
சுமப்பதனால் தலைக்கணமும் கூடிடுமோ..??

விண்ணையும் மண்ணையும் ஓர் அடியில்
அளந்தவன் பார்வையில் உன் கர்வமும்....
நான் என்ற அஹங்காரமும்...
யாரும் கண்டீராத அடி முடியில் அஸ்தமிக்கும்...

முன்னுரையும் முடிவுரையும்...
எழுதியவன் இடையில் விட்டுச்சென்ற..
வெற்றிடத்தில் நிரப்பிய யாவும்...
ஆசை மற்றும் மோகத்தினால் விளைந்த கர்மங்களே...

மரணத்தை எண்ணி கலங்காதே...
யாதும் கடந்த நிலையொன்று உள்ளது...
ஸ்துலம் விடுத்து பின்தொடரும்
கர்ம வினை தனை நேர் கொள்ள ஆயுத்தமாகு...

ஆற்றிய துஷ்கர்மங்களின் வினைகள்
மனதை பற்றிக்கொள்ளும்...
இருளாய் பயம் படரத் துவங்கும்..
நூறாவது மயிலிறகு விழ காத்திருக்கும்...

இன்னும் எதை கண்டு கலங்குகிறாய் அஜயா?

அகிலத்தின் ஆக்கமும், ஆற்றலும்,
இயக்கமும், நடந்ததும், நடைபெறுவதும்,
நடக்கப் போவதும், யாவும், யாதும்,

படைத்தவன் பரப்பிரம்மம் என்று உணர்..

வலியோ, இன்பமோ, துன்பமுமோ,
எதுவும் எனை கடந்தே உனைச் சேரும்..
விதி எதுவாயினும் கதி நானென்று
சரண் அடைவாய்.!! 

- அஜய் ரிஹான் 

 

கருத்துகள்